நவநீத கிருஷ்ணன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு
தஞ்சை மேலவீதி நவநீத கிருஷ்ணன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சை, மேலவீதியில் அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. ருக்மணி சத்யபாமாவுடன் நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். பாமா, பூமாதேவி அம்சம் என்றும், ருக்மணி லெட்சுமி அம்சம் என்றும் அழைப்பதுண்டு. பூமாதேவி பூலோக மக்களின் குறைகளை வானத்தில் உள்ள லெட்சுமிதேவியிடம் எடுத்து சமர்ப்பிக்கிறார்.
அதை லெட்சுமி தாயார் பகவானிடம் சமர்ப்பித்து அருள் செய்ய வழிவகை செய்கிறார். எனவே ஸ்ரீகிருஷ்ணரை பாமா ருக்மணி சமேதராக வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். புண்ணிய நகராகிய துவாரகையில் நாராயணன் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்து மணிமுடித்து மன்னராய் வீற்றிருந்த காலத்தில் வேதங்களை கற்று வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்த குசேலன் தன் மனைவியின் வேண்டுதலின் பேரில் தன் பால்ய நண்பன் ஸ்ரீகிருஷ்ணரை காணச்சென்றார்.
குடிசை மாளிகையானது
ஸ்ரீகிருஷ்ணன் குசேலனை அன்போடு தழுவி வரவேற்று உபசரித்து விருந்தளித்து மகிழ்வுடன் பேசி தனக்கு கொடுக்க கந்தல் துணியில் முடிந்த அவலை கேட்டு வாங்கி முகமலர்ச்சியுடன் இரண்டு கைபிடி உண்ணவும் குசேலன் குடிசை விண்ணை தொடும் மாளிகையானது. துவாரகைக்கு நிகராக செல்வம் நிரம்பி வழியும் பேறுபெற்ற நாள் அட்சயதிருதியை என்பது மக்கள் நம்பிக்கை.
அன்றைய தினம் நவநீத கிருஷ்ணனுக்கு பக்தர்கள் அவரவர் கைகளால் மூன்று கைபிடி அளவு அவலை புது துணியில் முடிந்து மூன்று முறை கோவிலை வலம் வந்து இறைவன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து பிரார்த்தனை காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வழிபட்டால் தொழில் அபிவிருத்தி ஆகும். செல்வம் வளம் கொழிக்கும். குசேலன் பெற்ற குபேர வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்
அட்சய திருதியை சிறப்பு வழிபாடு
இதனை நினைவு கூறும் வகையில் தஞ்சை மேலவீதி நவநீத கிருஷ்ணன் கோவிலில் ஆண்டு தோறும் அட்சய திருதியை வழிபாடு கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும். தீபாராதனையும், மாலை 6 மணிக்கு பக்தர்கள் அவல் முடிச்சு ஏந்தி மூன்று முறை கோவிலை வலம் வந்து அவல் முடிச்சு சமர்ப்பித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், கோவில் மேற்பார்வையாளர் ரெங்கராஜன் மற்றும் தேவஸ்தான பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருக்கல்யாண வைபவம்
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் லாலிஹால் அருகில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அட்சய திருதியை முன்னிட்டு 2-வது ஆண்டாக ஸ்ரீதேவி, பூதேவி சமதே வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீபாராதனையும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்தனர்.