அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி முழுமையான தேர்வு முடிவுகள் எப்போது?
அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி முழுமையான தேர்வு முடிவுகள் எப்போது என்று மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.;
காரைக்குடி,-
அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி முழுமையான தேர்வு முடிவுகள் எப்போது என்று மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தேர்வு முடிவுகள்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் 1992-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சான்றிதழ், பட்டயம், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. செமஸ்டர் முறையில் டிசம்பர் மற்றும் ஏப்ரலில் தேர்வுகள் நடைபெறுகின்றன. கடந்த டிசம்பர் 2021-ல் தொலைநிலைக்கல்வி படிப்புக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளதாக மாணவர்கள், படிப்பு மைய நிர்வாகிகள் புகார் தெரிவித்து உள்ளனர். அக மதிப்பீட்டு முறையில் 25 மதிப்பெண்களுக்கும் புற மதிப்பீட்டு முறையில் 75 மதிப்பெண்களுக்கும் ஆக மொத்தம் 100 மதிப் பெண்களுக்கு தேர்வு நடத்தி இளங்கலை பாடத்தில் குறைந்தது 40 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி எனவும், முதுகலை படிப்புகளில் குறைந்தது 50 மதிப்பெண்கள் பெற் றால் தேர்ச்சி எனவும் பல்கலைக்கழக தேர்வு விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதிர்ச்சி
ஆனால் தற்போது வெளியிடப்பட்டு உள்ள தேர்வு முடிவுகளில் அக மதிப்பீட்டில் ஜீரோ மதிப்பெண் என குறிப்பிட்டு புற மதிப்பீட்டில் மாணவர்கள் பெற்ற மதிப் பெண்களை குறிப்பிட்டு பெரும்பாலான மாணவர்கள் பெயில் என தேர்வு முடிவுகள் வெளிவந்து உள்ளன. இதனை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சிஅடைந்து, தாங்கள் நன்றாக எழுதிய அகமதிப்பீட்டு தேர்வுகளுக்கு எப்படி ஜீரோ மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்கலைக்கழகத்தை அணுகி கேட்டபோது, தங்களது அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் படிப்பு மையங்களில் இருந்து வரவில்லை எனவும் அதனால் ஜீரோ மதிப்பெண் என குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர் .அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் படிப்பு மையங்களில் இருந்து வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து பின்னர் வெளியிட்டு இருக்கலாம். அல்லது ஜீரோவிற்கு பதிலாக அடிக்கோடிட்டு காட்டி இருக்கலாம். ஆனால் பல்கலைக்கழகம் ஜீரோ மதிப்பெண் போட்டது எப்படி? வரும் நாட்களில் அக மதிப்பீட்டு மதிப்பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு வரப்பெற்றால் ஜீரோ மதிப்பெண்ணை எடுத்துவிட்டு வரப்பெற்ற மதிப்பெண்ணை சேர்க்க இயலுமா? என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
புகார்
மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என கம்ப்யூட்டரில் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களது பதிவு எண் கம்ப்யூட்டர் பதிவுகளில் இல்லை என வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் முழுவதும் வெளியிடப்படாமல் சில பாடங் களுக்கு மட்டும் முடிவுகள் வெளியாகி இருப்பதாகவும் பல பாடங்களில் தேர்வு முடிவுகள் வெளி வரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே முறையான முழுமையான தேர்வு முடிவுகளையும் மதிப்பெண் பட்டியலையும் உடனடியாக வழங்கி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பல்கலைக்கழகம் உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது.