அருமனை அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி

அருமனை அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2022-05-03 19:13 GMT
அருமனை, 
அருமனை அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
அருமனை அருகே உள்ள சங்கரன்கடவு என்ற இடத்தில் இருந்து நேற்று மாலையில் ரப்பர் மரம் தடிகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி கேரளாவை நோக்கி புறப்பட்டது. அந்த லாரி நெட்டா பகுதியில் சென்ற போது எதிரே இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். 
எதிர்பாராத விதமாக லாரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் கடையல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதலில் இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
வாட்ஸ் அப்பில் பரப்பினர்
இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக விபத்து குறித்த தகவல்களை போலீசாரும், பொதுமக்களும் வாட்ஸ்-அப் மூலம் பரப்பினர். வாட்ஸ்-அப் மூலம் தகவல் அறிந்த உறவினர்கள் கடையல் போலீசாரை தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் களியக்காவிளை அருகே உள்ள ஒற்றைமரம் என்ற இடத்தை சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் செய்யது அலி (வயது25), படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் சிபின் (24) என்பது தெரிய வந்தது. செய்யது அலி மெக்கானிக்காகவும், சிபின் ஸ்டுடியோவிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் சிற்றார் அணை பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது விபத்து நடந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுெதாடர்பாக கடையல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்