களியக்காவிளை அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

களியக்காவிளை அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-05-03 19:11 GMT
களியக்காவிளை, 
களியக்காவிளை அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
நகை பறிக்க முயற்சி
களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் நாககுமாரி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென நாககுமாரி மீது பாய்ந்து அவரது கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். 
இதனால், அதிர்ச்சி அடைந்த நாககுமாரி, ‘திருடன்... திருடன்...’ என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். ஆனால், பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். 
போலீசில் ஒப்படைப்பு
தொடர்ந்து அவருக்கு தர்ம அடி கொடுத்து களியக்காவிளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மணபழஞ்சியை சேர்ந்த அபிராக் (வயது20) என்பது தெரியவந்தது. 
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அபிராக் தனியாகதான் நகை பறிக்க வந்தாரா? அல்லது அவருடன் வந்த கூட்டாளிகள் தப்பி சென்றார்களா? இவர் வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்