ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-03 18:53 GMT
கரூர், 
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் கரூர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மயில் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் 7 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் வருகிற 16-ந்தேதி இக்கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு செய்வது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்கிட வேண்டும். 1-1-2022 முதல் மத்திய அரசு வழங்கியுள்ள அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். தொடக்க கல்வித்துறை இதுவரையில் நடைபெறாமல் உள்ள மாவட்ட மாறுதல், மனமொத்த மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொருளாளர் மத்தேயு உள்பட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்