2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-05-03 18:22 GMT
வேலூர்

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மாணவி பாலியல் பலாத்காரம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சங்கர்நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவருடைய தந்தை சரவணன் சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றை நிர்வகித்து வந்தார். கார்த்திக் அந்த காப்பகத்தை கண்காணிப்பதாக கூறி அங்கு அடிக்கடி சென்று வந்தார். 

அப்போது அவர் பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கி பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கிடையே நிர்வாக பிரச்சினை காரணமாக தனியார் காப்பகம் மூடப்பட்டது. 

அந்த மாணவி காட்பாடியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு மாற்றப்பட்டார். கார்த்திக் காட்பாடிக்கு வந்து மாணவிக்கு தொல்லை கொடுத்தார்.

 இதுகுறித்து காப்பக நிர்வாகிகள் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதேபோன்று லத்தேரி அருகே உள்ள கரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (26). இவர் 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார். அதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். ‌

இதுகுறித்த புகாரின்பேரில் லத்தேரி போலீசார் ராஜசேகரனை கைதுசெய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தார்கள்.

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான கார்த்திக், ராஜசேகரன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரை செய்தார். 

அதன்பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் இருவரிடமும் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்