எசனை காட்டுமாரியம்மன் கோவில் தேரோட்டம்

பெரம்பலூர் அருகே உள்ள எசனை காட்டுமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-05-03 17:39 GMT
பெரம்பலூர்
சித்திரை திருவிழா 
பெரம்பலூர் அருகே உள்ள எசனையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள எசனை காட்டுமாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 17-ந் தேதி பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த மாதம்  24-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழாவின்போது ஏகாந்தசேவை, அன்னம், சிம்மம், பள்ளிகொண்ட காட்சி, சூரியன் சந்திரன்பிரபை ஆகிய அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நாள்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும், கடந்த 1-ந் தேதி பூம்பல்லக்கு வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், நேற்று முன்தினம் பொங்கல் வழிபாடு, மாவிளக்கு பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன. 
இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தேரோட்டம் 
 இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மனை எழுந்தருள செய்து தேரோட்டம் நடைபெற்றது. வடம்பிடித்தல் நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர் அரவிந்தன், கோவில் ஆய்வாளர் வினோத்குமார், கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பெரியசாமி, செல்லமுத்து, லோகுநல்லுசாமி, வேணுகோபாலசுவாமி, கோவில் செயல்அலுவலர் தேவி மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
தாரை தப்பட்டை மற்றும் மேளதாளங்களுடன் எசனை கடைவீதியில் இருந்து புறப்பட்டு புதுப்பிள்ளையார் தெரு, வேணுகோபாலசுவாமி, அக்ரகாரம், சிவன்கோவில் தெரு உள்ளிட்ட கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டு திருத்தேர் மாலையில் அதன் நிலைக்கு வந்தடைந்தது. இதில் எசனை, அரும்பாவூர், அன்னமங்கலம், பாப்பாங்கரை, சோமண்டாபுதூர், கோனேரிபாளையம், வேப்பந்தட்டை, தொண்டபாடி, அனுக்கூர், பெரம்பலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மஞ்சள்நீர்-விடையாற்றிவிழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்