சுப்பிரமணியர் சிலை சேதம்

சுப்பிரமணியர் சிலை சேதம் குறித்து விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-05-03 17:38 GMT
ராமேசுவரம் 
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் கோவிலின் சாமி சன்னதி உள்ளே செல்லும் பாதையில் இடதுபுறம் கருங்கல்லினால் ஆன விநாயகர் சிலை ஒன்றும் வலதுபுறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சிலை ஒன்றும் அமைந்து உள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலின் சாமி சன்னதி அருகே அமைந்துள்ள சுப்பிரமணியர் சிலையின் வலதுகை உடைந்து சேதமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. சேதமடைந்த பகுதி தெரியாமல் இருப்பதற்காக சுப்பிரமணியர் சிலையை சுற்றி பரிவட்டம் போடப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி ராமேசுவரம் கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சிலையின் வலது கை உடைந்து உள்ளது உண்மைதான். இதுகுறித்து சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஸ்தபதி விரைவில் சேதமான சாமி சிலையை பார்வையிட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும். சாமி சிலை எப்படி உடைந்தது என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இந்த சிலையின் இடது புறம் அமைந்துள்ள வள்ளியின் சிலை ஏற்கனவே சேதம் அடைந்ததால் கடந்த 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியபோது புதிதாக சிலை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்