மசூதி ஒலிபெருக்கி விவகாரம்- ராஜ்தாக்கரே மீது வழக்குப்பதிவு

மசூதி ஒலிெபருக்கி விவகாரத்தில் ராஜ்தாக்கரே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-05-03 17:04 GMT
கோப்பு படம்
மும்பை, 
மராட்டியத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் அவுரங்காபாத்தில் கடந்த 2-ந்தேதி நவநிர்மாண் சேனாவின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்கரே, "மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் அகற்றப்படவில்லை என்றால், இந்துக்கள் மசூதிகளின் முன் நின்று இரு மடங்கு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளில் அனுமன் பாடல்களை ஒலிக்க செய்வார்கள். மேலும் ஒலி பெருக்கிகளை அகற்றாவிட்டால் 4-ந் தேதி முதல் நடைபெறும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பல்ல" என பேசியிருந்தார்.
இதற்கிடையே அவுரங்காபாத் போலீசார் ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் (116, 117, 153 (ஏ), எம்.பி.ஓ. 135) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒலிபெருக்கி விவகாரத்தில் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விவகாரத்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீலிடம் தீவிர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு, மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம், யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க வேண்டாம் என உத்தவ் தாக்கரே கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்