தேன்கனிக்கோட்டை அருகே குதிரையை கொன்ற சிறுத்தை: கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் கிராம மக்கள் பீதி
தேன்கனிக்கோட்டை அருகே குதிரையை கொன்ற சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே பேளாளம்-நெல்லுமார் சாலையில் பெங்களூருவை சேர்ந்த அல்லி உல்லாகான் (வயது50) என்பவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் உள்ளது. இந்த பண்ணையில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1-ந் தேதி பண்ணையில் கால்கள் கட்டப்பட்டு இருந்த 5 வயது பெண் குதிரையை மர்மவிலங்கு ஒன்று கடித்து கொன்றது.
இதைத்தொடர்ந்து வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் பண்ணை தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி மர்ம விலங்கை கணிகாணித்தனர். அப்போது சிறுத்தை ஒன்று குதிரை பண்ணைக்குள் புகுந்து அங்கு இறந்து கிடந்த குதிரையின் உடலை சாப்பிடும் காட்சிகள் பதிவானது. இதனால் குதிரையை சிறுத்தை தாக்கி கொன்றதை வனத்துறையினர் நேற்று உறுதி செய்தனர்.
சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தளி, பேளாளம், நெல்லுமார், ஆச்சுபாலம் உள்ளிட்ட கிராமமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.