திருக்கோவிலூரில் சப்-கோர்ட்டு அமைக்கவேண்டும் அமைச்சர் பொன்முடியிடம், வக்கீல்கள் கோரிக்கை
திருக்கோவிலூரில் சப்-கோர்ட்டு அமைக்கவேண்டும் என அமைச்சர் பொன்முடியிடம் வக்கீல்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் மூத்த வக்கீல் பொன்.ராமதாஸ், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவரும், முன்னாள் வக்கீல் சங்க தலைவருமான ராயல் எஸ்.அன்பு ஆகியோர் தலைமையில் மணம்பூண்டியில் உள்ள திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- திருக்கோவிலூரில் சப்- கோர்ட் அமைக்கவேண்டும் என கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தோம். இந்தநிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் திருக்கோவிலூரில் சப்- கோர்ட்டு அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால் திருக்கோவிலூரில் சப்-கோர்ட் வருமா? வராதா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே திருக்கோவிலூரில் சப்-கோர்ட்டு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற அமைச்சர் பொன்முடி உடனடியாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சட்டத்துறை உயர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருக்கோவிலூரில் சப்-கோர்ட்டுஅமைக்கும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகரமன்ற தலைவருமான டி.என்.முருகன், வக்கீல் சங்க தலைவர் ஆனந்தன், துணைத் தலைவர் ராஜ்குமார், மூத்த வக்கீல்கள் இளங்கோவன், ராமதாஸ், மூர்த்தி, ராஜேஷ், சுவாமிநாதன், பாண்டு, அரசு, சங்கரன், இளம் வக்கீல்கள் ராஜாராமன், சுனில், குரு, சாரதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.