14 ஆண்டுகள் பழமையான வழக்கில் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
14 ஆண்டுகள் பழமையான வழக்கில் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சாங்கிலி கோர்ட்டு பிறப்பித்து உள்ளது.
மும்பை,
14 ஆண்டுகள் பழமையான வழக்கில் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சாங்கிலி கோர்ட்டு பிறப்பித்து உள்ளது.
பிடிவாரண்ட்
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து அவுரங்காபாத்தில் நேற்று முன்தினம் ராஜ் தாக்கரே பேசியிருந்தார். இதையடுத்து இருபிரிவினர் இடையே மோதலை தூண்டியதாக அவர் மீது அவுரங்காபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்தநிலையில் 14 ஆண்டுகள் பழமையான வழக்கில் சாங்கிலி மாஜிஸ்ரேட்டு கோர்ட்டு ராஜ் தாக்கரேவுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ராஜ் தாக்கரே மீது 109, 117 பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கு தொடர்பாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஷிராலா முதன்மை நீதிபதி கடந்த 6-ந் தேதி பிறப்பித்த வாரண்டில், மும்பை போலீஸ் கமிஷனரகம் ராஜ் தாக்கரேயை கைது செய்து கோா்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகவில்லை
மேலும் இதுதொடர்பாக அரசு தரப்பு உதவி வக்கீல் ஜோதி பாட்டீல் கூறுகையில், "வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் ராஜ் தாக்கரே மற்றும் நவநிர்மாண் சேனாவை சேர்ந்த ஸ்ரீரிஷ் பார்கர் ஆகியோருக்கு மும்பை போலீஸ் கமிஷனர், கேர்வாடி போலீசார் மூலமாக நீதிபதி வாரண்ட் பிறப்பித்து உள்ளார் " என்றார்.
இந்தநிலையில் ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறித்து நவநிர்மாண் சேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அரசியல் தலைவர்களுக்கு எதிராக 2012-க்கு முன் பதிவான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அரசு விதி உள்ளது. தற்போது ஒலிபெருக்கி விவகாரம் காரணமாக இந்த வழக்கு மீண்டும் உத்தவ் தாக்கரேவால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.