அமித்ஷாவுடன் பசவராஜ் ஹொரட்டி சந்திப்பு மேல்-சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசிய பசவராஜ் ஹொரட்டி, மேல்-சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Update: 2022-05-03 16:43 GMT


பெங்களூரு:

பா.ஜனதாவில் சேர முடிவு

  கர்நாடக மேல்-சபை தலைவராக இருப்பவா் பசவராஜ் ஹொரட்டி. ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பசவராஜ் ஹொரட்டி, 7 முறை மேல்-சபை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் அவர், பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

  இந்த நிலையில் பெங்களூருவில் தனியார் நட்சத்திர ஓட்டலில் உள்துறை மந்திரி அமித்ஷாவை மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி நேரில் சந்தித்து பேசினார். அப்போது தான் பா.ஜனதாவில் சேர விரும்புவதாக கூறினார். அதை அவர் ஏற்றுக்கொண்டார். 

இந்த சந்திப்பின்போது, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், வருவாய்த்துறை மந்திரி
ஆர்.அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.

ராஜினாமா செய்கிறேன்

  அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பசவராஜ் ஹொரட்டி, ‘பா.ஜனதாவில் இணைவது குறித்து அமித்ஷாவுடன் பேசினேன். ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். அதேபோல் மேல்-சபை தலைவர் பதவியையும் வருகிற 11-ந் தேதி ராஜினாமா செய்கிறேன். 

அதன் பிறகு பா.ஜனதாவில் சேருவேன். காலசூழ்நிலை காரணமாக பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளேன். ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பா.ஜனதாவில் நான் சேருவதை யாரும் எதிர்க்கவில்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட அனைத்து தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்’ என்றார்.

  பசவராஜ் ஹொரட்டியின் எம்.எல்.சி. பதவி காலம் விரைவில் நிறைவடைகிறது. இதனால் அவர் பா.ஜனதா சார்பில் ஆசிரியர் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்றதும் மீண்டும் அவருக்கு மேல்-சபை தலைவர் பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்