வீடு கட்டும் திட்டங்களுக்கான மதிப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்- ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்
வீடு கட்டும் திட்டங்களுக்கான மதிப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
பொறையாறு:-
வீடு கட்டும் திட்டங்களுக்கான மதிப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
மாவட்ட மாநாடு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் மாரிதெட்சிணாமூர்த்தி நிதி நிலை அறிக்கை படித்தார்.
மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன், மாநில பொதுச்செயலாளர் பாரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஊரக வளர்ச்சித் துறை சந்திக்கும் சவால்கள் குறித்து முன்னாள் மாநில பொருளாளர் நாகராஜன் பேசினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மதிப்பீட்டு தொகை
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வெளியிட்ட அரசாணைப்படி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், பழங்குடியினர் மக்களுக்கான வீடுகளுக்கான மதிப்பீட்டு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். அனைத்து ஊராட்சிகளுக்கும் மானியத்தை உடனடியாக மாநில நிதிக்குழு
விடுவிக்க வேண்டும்.
புதிய மயிலாடுதுறை மாவட்டத்துக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்டார தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.