ரம்ஜான் பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
ரம்ஜான் பண்டிகை
ஈகைத்திருநாளாம் ரம்ஜான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. முன்னதாக நான்குமுனை சந்திப்பு முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி சாலை வழியாக ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அதன்பிறகு அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை நல்லதண்ணீர் குளம் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் புத்தாடை அணிந்து வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ரம்ஜான் சிறப்பு தொழுகையை முன்னிட்டு திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் அரகண்டநல்லூரில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக அரகண்டநல்லூர் கடைத்தெரு பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்பட்டு ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அதன்பிறகு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் அரகண்டநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சங்கராபுரத்தில் உள்ள ஜாமியா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல், மக்கா பள்ளிவாசல், நவபி பள்ளிவாசல் பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
மூங்கில்துறைப்பட்டு ஏரிக்கரை செல்லும் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயப்பாளையம் உள்பட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் மைதானங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.