ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக கலந்து கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்று. முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் மாத நோன்பை கடைபிடிக்கும் விதமாக புனித ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதாவது இஸ்லாமிய மாதங்களில் 9-வது மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் இந்த நோன்பை கடைபிடிப்பார்கள்.
இந்த ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த ஒரு மாத நோன்பு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் இந்த பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடினர்.
சிறப்புத்தொழுகை
இதையொட்டி முஸ்லிம்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவர்களும், பெரியவர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. நாகர்கோவில் கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறுவர்- சிறுமிகளும் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
அறுசுவை விருந்து
தொழுகை முடிவில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். திட்டுவிளை ஜூம்மா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு, வடசேரி, இடலாக்குடி, பெருவிளை, மாதவலாயம், தக்கலை, திருவிதாங்கோடு, குலசேகரம், குளச்சல், மார்த்தாண்டம், தேங்காப்பட்டணம், களியக்காவிளை, கன்னியாகுமரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
இந்த பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் பிரியாணி உள்ளிட்ட அறுசுவை விருந்து சமைத்து உறவினர்கள், நண்பர்கள், ஏழை- எளிய மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.