சீர்காழியில் சட்டவிரோதமாக நடந்த விற்பனை: லாட்டரி சீட்டு கடை பணியாளரை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை

சீர்காழியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த கடையில் பணியாளரை தாக்கி ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-05-03 18:45 GMT
சீர்காழி:-

சீர்காழியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த கடையில் பணியாளரை தாக்கி ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

லாட்டரி சீட்டு விற்பனை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி-சிதம்பரம் சாலை இரணியன் நகரில் உள்ள ஒரு கடையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். இந்த கடையில் இருந்து சிதம்பரம், வல்லம்படுகை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று மதியம் 1 மணி அளவில் இந்த கடையில் 3-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அதை வாங்குவதற்காக ஏராளமானோர் அங்கு நின்றிருந்தனர். 

அரிவாளால் தாக்கினர்

இந்த நிலையில் 3 மோட்டார் சைக்கிள்களில் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு மர்ம நபர்கள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்து, கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவரை அரிவாளின் பின் பகுதியை கொண்டு தாக்கினர். 
அதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்த பணியாளர்களிடம் இருந்து 3 செல்போன்களை பறித்துக்கொண்டு, கடையில் இருந்த ரூ.3 லட்சத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். 

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சீர்காழியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்