பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொதுத்தேர்வையொட்டி வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொதுத்தேர்வையொட்டி வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பொதுத்தேர்வு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 74 பள்ளிகள் உள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1.15 மணி வரை நடைபெறுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை மொத்தம் 4,871 பேரும் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு 24 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை 5,846 பேர் எழுதுகின்றனர்.
இதற்காக 42 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வருகிற 10-ந்தேதி தொடங்கும் பிளஸ்-1 பொதுத்தேர்வை 24 மையங்களில் 5,079 பேர் எழுதுகின்றனர். தேர்வுகள் வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய பொதுத்தேர்வுகளுக்கு கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து வினாத்தாள்கள் லாரியில் பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் வினாத்தாள்கள் அறைகளில் வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வினாத்தாள்கள் பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். மையங்களில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.