கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு நடுப்புணி சாலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் வடக்கிபாளையத்தில் இருந்து நடுப்புணி செல்லும் சாலையில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது கருப்பராயன் கோவில் பகுதியில் மறைவான இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மாப்பிள்ளைகவுண்டன்புதூரை சேர்ந்த ஆதிஸ்வரன் என்பவர் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்கு ரேஷன் அரிசியை வைத்திருந்தது தெரியவந்தது.
இதற்கிடையில் போலீசார் வருவதை பார்த்ததும் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் மொபட்டுடன் 21 மூட்டைகளில் இருந்த 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.