தேனியில் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.16¾ லட்சம் மோசடி மேலாளர்கள் உள்பட 10 பேர் மீது வழக்கு
தேனியில் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.16¾ லட்சம் மோசடி செய்ததாக மேலாளர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதி நிறுவனத்தில் மகளிர் சுயஉதவிக்குழு வாடிக்கையாளர்கள் இறப்பு தொடர்பான ஆவணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. இதனால் நிதி நிறுவனத்தின் சார்பில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது வாடிக்கையாளர்களின் பெயரில் இறப்பு சான்றிதழ் உள்பட போலி ஆவணங்கள் தயார் செய்து, ரூ.16 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து நிதி நிறுவனத்தின் வட்டார மேலாளர் அய்யம்பெருமாள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் கொடுத்தார். இதில் மோசடியில் ஈடுபட்டதாக கிளை மேலாளரான அல்லிநகரத்தை சேர்ந்த சுரேஷ்குமார், கிளை நிர்வாக மேலாளர்களான மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த ரமேஷ்குமார், பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்த், தணிக்கை மேலாளரான உசிலம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி, முன்கள பணியாளர்களான அல்லிநகரத்தை சேர்ந்த ராஜேந்திரன், பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த பிரதீஷ்பாண்டி, கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவை சேர்ந்த பிரகாஷ், உசிலம்பட்டியை சேர்ந்த அஜித்குமார், மார்க்கையன்கோட்டையை சேர்ந்த மற்றொரு அஜித்குமார் என 10 பேர் மீது புகார் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து 10 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.