வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ராட்டினம், பொழுதுபோக்கு கண்காட்சி அமைக்கும் பணி தீவிரம்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு கண்காட்சி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உப்புக்கோட்டை:
தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 20-ந்தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் பக்தர்கள் தினமும் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். இதுதவிர மாவிளக்கு, அங்கப்பிரதட்சணம், ஆயிரம் கண்பானை எடுத்தல் என நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
இந்த கோவிலில் வருகிற 10-ந்தேதி முதல் 8 நாள் திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த 8 நாள் திருவிழா காலத்தில் பக்தர்கள் அக்னி சட்டி, காவடி, கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
வீரபாண்டி திருவிழாவையொட்டி அங்கு அமைக்கப்படும் ராட்டினங்கள், சர்க்கஸ், மாயாஜால நிகழ்ச்சிகள் அடங்கிய பொழுதுபோக்கு கண்காட்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும். இதை காண தேனி, மதுரை, திண்டுக்கல் மட்டுமின்றி அருகிலுள்ள கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். திருவிழா நடைபெறும் 8 நாட்களும் 24 மணிநேரமும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். இதையடுத்து மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு கண்காட்சி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி வளாகத்திற்குள் டிராகன் ராட்டினம், சைடு ரோலிங், பூம்பூம், சிறிய ரக ஜெயன்டுவீல், பேய் குகை, சர்க்கஸ், மாயாஜாலம், நாககன்னி, நாய் குறி சொல்லுதல் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.