கணவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு

செய்யாறு அருகே தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மர்மநபர்கள் மிரட்டி அவரது மனைவியிடம் 7 பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர்.

Update: 2022-05-03 13:01 GMT
செய்யாறு:

செய்யாறு அருகே தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மர்மநபர்கள் மிரட்டி அவரது மனைவியிடம் 7 பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர்.

வெம்பாக்கம் தாலுகா திருப்பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 35). சமையல் தொழிலாளி. இவரது மனைவி சுகுணா (30). விஜயன் பாப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மனைவி சுகுணா (30) மற்றும் மகன் காமேஸ்வரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது சுமங்கலி கிராமத்தின் அருகே சென்றபோது மர்ம நபர்கள் 3 பேர் விஜயனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். உடனே அவர்ள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயனின் கழுத்தில் வைத்து மிரட்டி சுகுணாவிடம் நகையை தரும்படி மிரட்டினர். 

அப்போது 3 பேரும் சுகுணா அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் செய்யாறு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

இதுதொடர்பாக மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இதே பகுதியில் டாஸ்மாக் ஊழியர்களிடம் மிளகாய் பொடி தூவி 3¼ லட்சம் வழிப்பறி, தனியார் பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளதால் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்