ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 14 வயது சிறுவன் குணம் அடைந்தான் - ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தகவல்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆன்லைன் விளையாட்டில் அடிமையாகி இருந்த 14 வயது சிறுவனுக்கு ஆலோசனை வழங்கி குணம் அடைந்து விட்டதாக ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2022-05-03 07:27 GMT
சென்னை,

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 14 வயது சிறுவன் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நன்றாக படித்து வந்த அந்த மாணவன், ஆன்லைன் வகுப்பின்போது வீட்டில் தனியாக இருந்ததுடன், பொழுதுபோக்காக இணையதளத்தில் விளையாட ஆரம்பித்துள்ளான். தொடர்ந்து அதில் ஈடுபாடு காட்டிய சிறுவன் நள்ளிரவு 3 மணி வரை விழித்திருந்து நண்பர்களுடன் போட்டி போட்டு விளையாடி உள்ளான்.

இதனால் படிப்பு உள்ளிட்ட மற்றவற்றில் சிறுவனுக்கு ஆர்வம் குறைந்து வீட்டில் மற்றவர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டான்.

இதுகுறித்து பெற்றோர் கண்டித்தபோது, ஆன்லைன் விளையாட்டில் சிறந்து விளங்குவதாகவும், அதற்கு படிக்கவோ, தேர்வு எழுதவோ தேவையில்லை எனவும் பதில் அளித்துள்ளான். இதையடுத்து அவனது பெற்றோர் சிறுவனை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி இணையதள மீட்பு மையத்தில் அனுமதித்தனர். அப்போது சிறுவன் உடல் மெலிந்து, பார்வை தொடர்பை தவிர்த்து, ஒற்றை எழுத்துகளில் பதில் அளித்ததையும், அவனது அசாதாரண அசைவுகளின் வீடியோ பதிவு எடுத்து காட்டியதும் அழ ஆரம்பித்தான்.

இதையடுத்து ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் இருந்து சிறுவனை மீட்க தொடர்ந்து ஆலோசனை வழங்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அந்த வகையில் 4 நாட்களுக்கு ஒருமுறை அவனுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் சிறுவனின் செல்போன் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளான். இதேபோல் 15 சிறுவர்கள், 8 சிறு பெண் குழந்தைகள், 39 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 67 பேர் இணையதள விளையாட்டிற்கு அடிமையாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.

பொதுவாக இன்றைய தலைமுறை தொடர்ந்து ஆன்-லைன் விளையாட்டு, ஆன்-லைன் சூதாட்ட அடிமையாதல், ஆன்லைன் ஆபாச படம் பார்ப்பது உள்ளிட்டவையே இணையதள சார்பு அடிமை நிலை ஆகும். மற்ற போதை பழக்கங்களை போல், இணையதள அடிமைத்தனத்திலும் நோய் அறிகுறிகள் ஏற்படும். அதில் இருந்து மீள உளவியல் சிகிச்சையும், மருந்துகளும் தேவைப்படுகிறது. ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில், இணையதள சார்பு அடிமை நிலை பாதிப்பு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்