சென்னை விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்ட போலீசார்
சென்னை விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.
சென்னை,
சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே தலைமை செயலக காலனி போலீசார் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா, ஆயுதங்களுடன் வந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த பெயிண்டர் சுரேஷ் (வயது 28), மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டும் வேலைபார்த்த விக்னேஷ் (25) ஆகிய 2 பேரை பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாணை நடத்தினர். இந்த நிலையில் விக்னேஷ் உயிரிழந்தார்.
போலீசார் சித்ரவதையால்தான் அவர் உயிரிழந்தார் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், போலீஸ்காரர் பொன்ராஜ், ஊர்க்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். விக்னேஷ் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. விக்னேஷ் மரண வழக்கை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் போலீசார் வாகன சோதனையின்போது விக்னேஷ் தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகளை போலீசார் நேற்று வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.