தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்புக்கான மதிப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்

கோவிலூரான் கொட்டாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்புக்கான மதிப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2022-05-03 01:52 GMT
தர்மபுரி:-
கோவிலூரான் கொட்டாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்புக்கான மதிப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
சாலை ஆக்கிரமிப்பு
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை செயற்கை முறை கருவூட்டாளர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், கால்நடை துறை வேலைவாய்ப்பில் கால்நடை கருவூட்டல் பயிற்சி முடித்தவர்களுக்கு வயது தளர்வு சலுகை, தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கால்நடை துறைக்கும் கிராம மக்களுக்கும் பாலமாக விளங்கும் எங்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அரூர் தாலுகா வீரப்ப நாயக்கன் பட்டியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், ஈட்டியம்பட்டி பகுதியில் இருந்து அண்ணாநகர் - பாளையம் தார் சாலையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், இந்தப் பகுதியில் வசிக்கும் 65 ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்த வீடு இல்லை. எங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
பாலக்கோடு தாலுகா கோவிலூரான் கொட்டாயில் உள்ள அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் 30 குடும்பங்கள் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். தற்போது தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் எடுப்பு செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கான மதிப்பீடு மிகவும் குறைவாக இருப்பதால் அதை உயர்த்தி வழங்க வேண்டும். மலைப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு பதிலாக பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், இந்தப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இந்த ஊராட்சியில் கலெக்டர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் திவ்யதர்சினி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்