கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தங்க சங்கிலி பறிப்பு- சித்தோடு அருகே கொள்ளையர்கள் அட்டூழியம்
சித்தோடு அருகே கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி கொள்ளையர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றார்கள்.
பவானி
சித்தோடு அருகே கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி கொள்ளையர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றார்கள்.
மோதினார்கள்...
ஈரோடு மாவட்டம் சித்தோடு கங்காபுரம் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் மோகனசுந்தரம். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர் கங்காபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மோகனசுந்தரமும், கிருஷ்ணவேணியும் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்கள். கங்காபுரம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள், மொபட்டின் மீது மோதினார்கள். இதில் கணவன், மனைவி இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தார்கள்.
நகை பறிப்பு
உடனே மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கிருஷ்ணவேனியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டார்கள்.
இதகுறித்து கிருஷ்ணவேனி சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேனியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.