ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக பெய்த மழை; அதிக பட்சமாக பெருந்துறையில் 125 மில்லி மீட்டர் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில் 125 மில்லி மீட்டர் மழை பதிவானது.;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில் 125 மில்லி மீட்டர் மழை பதிவானது.
சூறைக்காற்றுடன் மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஈரோட்டில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஈரோடு பெரியசேமூர் கூழையன் காடு செல்லும் ரோட்டில் பனை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அந்த வழியாக சென்ற, உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் 2 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
பெருந்துறையில் 125 மி.மீ பதிவு
இதேபோல் பெருந்துறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஓடைகளிலும் மழை வெள்ளம் பாய்ந்து சென்றது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக பெருந்துறையில் தான் அதிக மழை கொட்டி தீர்த்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை - 125, கவுந்தப்பாடி - 52.4, பவானி - 31, சென்னிமலை - 22, எலந்தகுட்டைமேடு - 20.4, கோபி - 12.4, வரட்டுப்பள்ளம் - 7, ஈரோடு - 5, பவானிசாகர் - 4.2, கொடிவேரி - 3.2, நம்பியூர் - 3, அம்மாபேட்டை - 1.2. மாவட்டம் முழுவதும் மொத்தம் 292.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.