தஞ்சாவூர்
தஞ்சை அருளானந்த நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது48). இவர் தெற்கு அலங்கம் தொப்புள் பிள்ளையார் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நகைக்கடைக்கு வந்த 17 வயது சிறுவன் தனது தாய்க்கு நகை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளான். அதற்கு பழனியப்பன் குறிப்பிட்ட மாடல்களை எடுத்து காட்டினார். அந்த சிறுவன் மேலும் சில மாடல்களை காட்டவேண்டும் என்று கூறினான். பழனியப்பன் மேலும் 2 மாடல்களை எடுத்துக் காட்டினார். அப்போது அந்த சிறுவன் 1½ பவுன் நகையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான். இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் பழனியப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனை கைது செய்தனர்.