பாபநாசத்தில் கிராம மக்கள் சாலை மறியல்
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பாபநாசத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
பாபநாசம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மாலாபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணுபிள்ளை மகன் கார்த்திக் (வயது30). இவர் தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தார். அப்போது பணியில் இருந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பாபநாசம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் காயம் அடைந்த வாலிபரை மாற்று ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.