அபிராமம் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அபிராமம் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

Update: 2022-05-02 20:53 GMT
மதுரை,

 அபிராமம் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் போஸ் (வயது 49). இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நந்திசேரி விலக்கு ரோடு பகுதியில் சென்ற அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த மோதிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றது.
இந்தநிலையில் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட அபிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீழ்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் (55) என்பவர் அந்த கும்பலை பார்த்து சந்தேகத்தின்பேரில் விசாரித்தார். உடனே அந்த கொள்ளை கும்பல் அவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த மோதிரம், கைக்கடிகாரம், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியது. இந்தநிலையில் சுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

5 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த சப்பாணி என்ற முருகேசன், ஞானவேல்பாண்டியன், ரவிசண்முகம், திருமூர்த்தி, துரைப்பாண்டி, முத்துராமலிங்கம் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணையின் போது 3 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் விடுவிக்கப்பட்டார். மீதம் உள்ள சப்பாணி, முத்துராமலிங்கம், ரவி சண்முகம், ஞானவேல்பாண்டியன், திருமூர்த்தி ஆகிய 5 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து பரமக்குடி செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் 5 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

மறுவிசாரணை நடத்த உத்தரவு

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், 2 கிரிமினல் வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே மனுதாரர்கள் மீதான தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை சம்பந்தப்பட்ட கீழ்கோர்ட்டு மறுவிசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர்கள் மறுவிசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்