“உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் பின்புலம் எதுவுமில்லை”-மதுரை மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகள் பேட்டி

நாங்கள் எதார்த்தமாக செய்தது சர்ச்சையாகிவிட்டது என்றும், உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் பின்புலம் எதுவுமில்லை எனவும் மதுரை மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Update: 2022-05-02 20:49 GMT
மதுரை,

நாங்கள் எதார்த்தமாக செய்தது சர்ச்சையாகிவிட்டது என்றும், உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் பின்புலம் எதுவுமில்லை எனவும் மதுரை மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உறுதிமொழி விவகாரம்

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக, டீனாக இருந்த ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில், மதுரை மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல், துணை தலைவர் தீப்தா, பொதுச் செயலாளர் வேணுகோபால் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மருத்துவ கல்லூரியில் கடந்த 30-ந் தேதியன்று முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தோம் என்று செய்திகள் பரப்பப்படுகிறது. அது தவறானது. சமஸ்கிருத மொழியில் இருந்த உறுதிமொழியை நாங்கள் படிக்கவில்லை. சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட உறுதிமொழியை ஆங்கிலத்தில் படித்தோம்.

கட்டுப்பாடு இல்லை

தேசிய மருத்துவ கவுன்சில் பாடத்திட்டத்தைத்தான் மருத்துவ கல்லூரியில் பின்பற்றுகிறோம். தேசிய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில், புதிதாக மருத்துவ கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை பரிந்துரை செய்துள்ளனர். அதேநேரத்தில் இந்த உறுதிமொழியைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு எதுவும் விதிக்கவில்லை. 
தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் ‘இப்போகிரெடிக்’ உறுதிமொழியைத்தான் எடுக்க வேண்டும், மகரிஷி சரக் சப்த் உறுதி மொழியை எடுக்கக்கூடாது என்றும் கூறவில்லை.
உறுதிமொழி ஏற்பு சர்ச்சையான பிறகுதான் தமிழக மருத்துவக்கல்வி இயக்குனரகம் தரப்பிலிருந்து ‘இப்போகிரெடிக்’’ உறுதிமொழியைத்தான் எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையை கடந்த 1-ந் தேதி (நேற்று முன்தினம்) அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் வெளியிட்டிருக்கிறது. 
நாங்கள் எதார்த்தமாக செய்தது சர்ச்சையாகும் என நினைக்கவில்லை. உறுதிமொழி விஷயத்தில் மாணவர் பேரவைதான் முடிவு செய்தது. இதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும், டீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அவசர கதியில்...
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழாவானது கடைசி 2 நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவசர கதியில் விழாவை மேற்கொண்டதால் இந்த சர்ச்சை எழ காரணமாகிவிட்டது. திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை. எந்தவிதமான பின்புலமும் இதில் இல்லை. இந்த தவறுக்கு நாங்கள்தான் பொறுப்பு.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்