அரசு மருத்துவமனை மருந்தாளுனர் வீட்டில் திருட்டு முயற்சி
அரசு மருத்துவமனை மருந்தாளுனர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.;
பெரம்பலூர்:
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா கொணலை ஊராட்சி, கல்பாளையத்தை சேர்ந்தவர் ஜேக்கப் பனிபாஸ்(வயது 51). இவரது மனைவி செலின் மார்சலா மெர்சியா(48). இவர்களுக்கு ஜெரோம் தாம்சன்(22) என்ற மகனும், பவுலின் பெனிட்டா(20) என்ற மகளும் உள்ளனர். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருந்தாளுனரான ஜேக்கப் பனிபாஸ் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் புதிய மதனகோபாலபுரம் ரோஸ் கார்டன் பகுதியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகிறார். செலின் மார்சலா மெர்சியா திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, பெரியவர்சீலியில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஜெரோம் தாம்சன் கல்பாளையத்தில் வீட்டில் இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பவுலின் பெனிட்டா திருச்சி தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜேக்கப் பனிபாஸ் கடந்த 30-ந்தேதி அவரது சொந்த ஊரான கல்பாளையத்துக்கு சென்று விட்டு நேற்று காலை பெரம்பலூரில் உள்ள வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தடிம கண்ட அவர் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் உள்ளிட்டவை சிதறி கிடந்தன. வீட்டில் நகை-பணம் இல்லாததால் ஏதும் திருட்டு போகவில்லை. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே ரோஸ் கார்டன் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வீடுகளில் திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.