மாணவரை கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி கலெக்டரிடம் பெற்றோர் மனு

அரசு பள்ளியில் மாணவரை தாக்கி கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர்மல்க மனு அளித்தனர்.

Update: 2022-05-02 20:17 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியை சேர்ந்த முருகன் மகன் செல்வசூர்யா (வயது 17). இவர் பள்ளகால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அங்கு மாணவர்களிடையே நடந்த மோதலில் செல்வசூர்யா தலையில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்களை கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் செல்வசூர்யாவின் தந்தை முருகன், தாய் உச்சிமாகாளி மற்றும் உறவினர்கள் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்க தலைவர் பேச்சிமுத்து, வக்கீல்களும் வந்திருந்தனர்.
அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது மாணவரின் பெற்றோர் கலெக்டரிடம், “தங்களுடைய மகன் சாவுக்கு நீதி வேண்டும்” என்று கண்ணீருடன் தெரிவித்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அந்த மனுவில், ‘‘தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை ஜாமீனில் விடக்கூடாது. அவர்கள் மீது 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இதேபோல் மற்ற பள்ளி, கல்லூரிகளில் சாதிய மோதல்கள் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.

இதுகுறித்து செல்வசூர்யாவின் தாய் உச்சிமாகாளி கூறுகையில், ‘‘பிளஸ்-2 படித்த எனது மகன் செல்வசூர்யா, சில மாணவர்களால் தாக்கப்பட்டு தலையில் காயம் அடைந்துள்ளான். அவனை 2 மணி நேரம் சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் பள்ளியிலேயே வைத்துள்ளனர். மாலை 5 மணிக்கு பிறகுதான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகமும், போலீசாரும் எங்களுக்கு உரிய தகவல் தரவில்லை. நாட்டுக்கு சேவை செய்ய எங்களது மகனை ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்திருந்தோம். ஆனால் கொலை செய்து விட்டனர். குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம். எனது மகனை தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்