விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
டிரைவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வினோத் (வயது 22), லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 3-ந்தேதி இறந்தார். திருமணம் ஆகாத இவருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக தெரிகிறது.
இதனால் அந்த பெண்ணுக்கு தெரிந்த 2 பேர் வினோத்தை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த வினோத் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே இவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வினோத்தின் உறவினர்கள் கடந்த மாதம் 4-ந்தேதி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத்தின் உறவினர்கள் நேற்று விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து வினோத்தின் உறவினர்கள் இன்ஸ்பெக்டர் முருகேசனை சந்தித்து வினோத்தின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அதனை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.