கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துமாலை (வயது 43). இவர் கடந்த 4-ந்தேதி இடப்பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திருத்து கீழத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (48), நடுவக்குறிச்சியை சேர்ந்த முருகன் (46), குஞ்சு முருகன் (28) ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு, பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
இதேபோல் பணகுடி நடுத்தெருவைச் சேர்ந்த இசக்கியப்பன் என்ற தாஸ் (26) போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இசக்கியப்பன் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.