ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அடிப்படை வசதி கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
தாயில்பட்டி,
அடிப்படை வசதி கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கிராம சபை கூட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது முறையாக வரவு, செலவினங்கள் காட்டப்படவில்லை. அரசு விதிமுறைப்படி கூட்டம் நடத்தப்படவில்லை. படிவம் 30 பார்வையாளர்களுக்கு கொடுக்கப்படாததால் மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று மீண்டும் கிராமசபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவள்ளி மற்றும் உறுப்பினர்கள் வந்தனர். பற்றாளராக லியாகத் அலி கலந்து கொண்டார். இதற்கிடைேய ஊராட்சி செயலாளர் செந்தில் வராததால் ஊராட்சி மன்ற அலுவலகம் நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. கிராம சபை கூட்டத்திற்கு மக்கள் திரண்டனர். ஆனால் 3 மணி நேரம் காத்திருந்தும் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை
இதனை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன், ஆகியோர் ேபாராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் திருமாநகர், ஆர்.சி. தெரு, அண்ணா காலனி உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இல்லை. ஆதலால் அதிகாரிகள் வருகை தந்து கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே முற்றுகை போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்குள் சமைத்து சாப்பிட தொடங்கினர்.
அடிப்படை வசதி
தொடர்்ந்து அவர்களிடம் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் பேசுகையில், உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் ஊராட்சியில் ஊழல் நடைபெற்று இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் நேற்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.