போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் சாவு
திண்டிவனத்தல் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் அளித்தார்.;
திண்டிவனம்
கடலூர் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தீபன்(வயது 40). இவருடைய மனைவி பெரியநாயகி(33). இவர்களுக்கு ஹேமஸ்ரீ(7), பிரகஸ்ரீ(4) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
மது குடிக்கும் பழக்கம் உடைய பார்த்தீபன், திண்டிவனம் பாஞ்சாலம் சாலை பகுதியில் உள்ள குடிபோதை மற்றும் மனநோய் சிகிச்சை மையத்தில் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்காக சிகிச்சை பெற கடந்த மாதம் 14-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அன்று அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை மையத்தில் இருந்து பெரியநாயகியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பார்த்திபனுக்கு வலிப்பு வந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பெரியநாயகி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது கணவரை பார்த்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பார்த்தீபன் இறந்தார்.
இதில் பெரியநாயகி மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் தனது கணவர் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் ரோஷணை போலீசில் பெரியநாயகி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.