கண்மாயில் மீன்பிடி திருவிழா
காரியாபட்டி அருகே கம்பிக்குடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதிகளில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் கண்மாய்கள் அனைத்தும் நிரம்பின. மேலும் வைகை ஆற்றில் இருந்து நிலையூர்-கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் பலஆண்டுகளாக நிரம்பாத கம்பிக்குடி கண்மாயும் முழுமையாக நிரம்பியது. இதனால் காரியாபட்டி அருகே விவசாயம் முழுமையாக நடைபெற்றது. கம்பிக்குடி கிராமத்தில் உள்ள 1,440 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகண்மாயில் நேற்று மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. அதிக பாசன நீர் நிலைகளை கொண்ட கம்பிக்குடி கண்மாயில் மீன்களை வளர்ப்பதும், நீர் வற்றியதும் மீன்களை பொதுமக்கள் பிடிப்பது என்பது காலங்காலமாக நடந்து வந்துள்ளது. மந்திரிஓடை, சின்ன கம்பிக்குடி, பெரிய கம்பிக்குடி, ஆவியூர், ஆலங்குளம், அச்சங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர். முதலில் கம்பிக்குடி கிராமத்தில் உள்ள வாழவந்த அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால், தேன் கெளுத்தி ஆகிய மீன்கள் கிடைத்தன. அதிலும் குறிப்பாக 5 கிலோ முதல் 10 கிலோ வரை உள்ள பெரிய வகை மின்களும் நிறைய பேருக்கு கிடைத்தன.