மூட்டை ஒன்றுக்கு 65 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
திருக்கோவிலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை ஒன்றுக்கு 65 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள கோலப்பாறை கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு கோலப்பாறை, திம்மச்சூர், நெடுமுடையான், பாடியந்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை மூட்டைகளாக கட்டி கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.
அவ்வாறு வரும் விவசாயிகளிடம் கொள்முதல் நிலைய ஊழியர்கள் நெல் ஈரப்பதமாக இருப்பதாகவும், சுத்தம் இல்லாமல் இருப்பதாகவும் குறை கூறி கொள்முதல் நிலையத்தில் வைத்திருக்கும் எந்திரத்தில் விவசாயிகளின் நெல்லைக் கொட்டி சுத்தம் செய்கின்றோம் என்கிற போர்வையில் ஒரு மூட்டைக்கு சுமார் 10 கிலோ அளவுக்கு தரமற்ற நெல்களும் கருக்கா மற்றும் பதர்கள் இருப்பதாகவும் கூறி அதனை மொத்த எடையில் கழித்து விடுவதாக விவசாயிகள் புலம்புகிறார்கள். மேலும் தலா 40 கிலோ 600 கிராம் எடை வைத்து எடுக்க வேண்டிய ஒரு மூட்டையை 41 கிலோ என எடை வைத்து எடுக்கின்றனர். இதனால் விவசாயி களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
முறைகேடு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மேற்கண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நாங்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். இது தவிர அதிகாரிகளுக்கும், எடை போடும் ஊழியர்களுக்கும், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளருக்கும் பணம் தர வேண்டும் என எங்களிடம் கூறி தலா ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் வரை லஞ்சமாக வாங்கி வருகிறார்கள். இதை எதிர்த்து கேட்கும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வது கிடையாது. மேலும் 40 அல்லது 50 மூட்டைகள் எடுத்து வரும் விவசாயிகளிடம் அங்குள்ள எந்திரங்கள் மூலம் தரமற்ற நெல் என கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்ட பதர், கருக்கா ஆகிய கழிவுகளை விவசாயிகளிடம் மீண்டும் தரவும் மறுக்கின்றனர்.
விவசாயிகளுக்கு துரோகம்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஒரு சில இடைத்தரகர்களை கையில் வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்து வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தவறு செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.