சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரி இறந்தவர் உடலை சாலையில் வைத்து கிராமமக்கள் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரி இறந்தவர் உடலை சாலையில் வைத்து கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-05-02 18:48 GMT
திருமயம்:
சாலை மறியல் 
திருமயம் அருகே அம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 43). இவர் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இந்த நிலையில் இறந்தவர் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடியாமல் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்து விட்டதாகவும்,  பாதையை மீட்டு தரக்கோரி பாண்டி உறவினர்களும், கிராமமக்களும் பொன்னமராவதி-திருமயம் சாலையில் இறந்தவர் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.  
பேச்சுவார்த்தை 
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி, துணை ேபாலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான், ஊராட்சி மன்ற தலைவர் லதா சண்முகம், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையையும், 3 சமுதாயத்துக்கு உள்ள சுடுகாட்டையும் தனிநபர் ஆக்கிரமித்து விட்டதால் எங்களால் இறந்து போனவர்களைத் சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. விவசாயம் செய்த வயலுக்கு செல்ல முடியவில்லை. நாங்கள் காலங்காலமாக பயன்படுத்திய பாதையை திறந்து விட வேண்டும். சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு 
இதையடுத்து அதிகாரிகள் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சுடுகாட்டு பாதையை சீரமைத்து முள்வேலியை அகற்றி சரி செய்து கொடுக்கப்பட்டது. பின்னர் இறந்தவர் உடலை அந்த வழியாக கொண்டு சென்று பொதுமக்கள் அடக்கம் செய்தனர். இந்த மறியலால் பொன்னமராவதி-திருமயம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து இரண்டு தரப்பையும் அழைத்து திருமயம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்