நமக்கு நாமே திட்டத்தில் பழமையான நூலக கட்டிடத்தை சீரமைக்க முடிவு; ப.சிதம்பரம் தலைமையில் ஆலோசனை
சிவகங்கை நகரில் அமைந்துள்ள பழமையான நூலகக் கட்டிடத்தை சீரமைப்பது குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.
சிவகங்கை,
சிவகங்கை நகரில் அமைந்துள்ள பழமையான நூலகக் கட்டிடத்தை சீரமைப்பது குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேற்று சிவகங்கை நகராட்சிக்கு வந்தார். பின்னர் அவர் நகரசபைத் தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் கார்கண்ணன், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அவருடன் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உடன் வந்தனர். இதுதொடர்பாக நகரசபை தலைவர் துரை ஆனந்த் கூறியதாவது:-
சிவகங்கை கோகலேஹால் தெருவில் பழமையான நூலகம் உள்ளது. மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த நூலகத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த நூலகம் ஆரம்ப காலத்தில் மாவட்ட நூலகமாக செயல்பட்டது. பின்னர் மாவட்ட தலைநகர் உருவான பின்னர் சொந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால் அங்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்த நூலக கட்டிடம் சேதமடைந்து உள்ளது. இதை நமக்கு நாமே திட்டத்தில் சீரமைப்பது குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் பங்காக ரூ.75 லட்சமும், அரசின் பங்காக ரூ.1 கோடியே 50 லட்சம் சேர்த்து ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கோகலே ஹால் தெருவில் உள்ள நூலக கட்டிடம் சீரமைக்கப்பட உள்ளது. இங்கு நூலகம், கூட்ட அரங்கம் உள்பட அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
நூலகத்தை பார்வையிட்டார்
காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 6 ஆயிரம் புத்தகங்கள் கொண்டு திறக்கப்பட்ட புதிய நூலகத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக பள்ளி வந்த அவரை பள்ளி தலைமையாசிரியர் பிட்டோ பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அதன் பின்னர் ப.சிதம்பரம் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து பார்வையிட்டு கட்டிடத்தை ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் மாங்குடி எம்.எல்.ஏ., சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர்லெமாயூ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.