தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு
தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள மேலஆரியம்பட்டி குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது 79). இதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் (60), இவரது மகன் சூர்யா (21). முருகன் வீட்டு மரக்கிளை நமச்சிவாயம் வீட்டின்மேல் விழுவதால் அதை அவர் வெட்ட சொல்லியுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் முருகன் மற்றும் சூர்யா ஆகிய 2 பேரும் நமச்சிவாயத்தை திட்டி வாங்கருவாளை எடுத்து அவரது தலை, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் இழுத்து காயத்தை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் குச்சியால் அடித்துள்ளனர். இதை தடுக்க வந்த நமச்சிவாயத்தின் மனைவி பெரியக்காளையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த நமச்சிவாயம், பெரியக்காளை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நமச்சிவாயம் கொடுத்த புகாரின் பேரில் முருகன், சூர்யா ஆகிய 2 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.