பஞ்சு நூல் ஏற்றுமதியை தடை செய்வதே தீர்வாக அமையும்
மாதந்தோறும் நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்வதே தீர்வாக அமையும் என்று பின்னலாடை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், மே.3-
மாதந்தோறும் நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்வதே தீர்வாக அமையும் என்று பின்னலாடை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டம்
பனியன் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை நேற்று கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.100 வரை உயர்ந்து விட்டதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். அபரிமிதமான நூல் விலை உயர்வு ஒட்டுமொத்த பனியன் தொழிலையும் முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழில்துறையினர் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல்:-
பஞ்சு விலை ஏற்றத்தால் நூல் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பஞ்சு விலையேற்றத்துக்கு ஏற்ப நூல் விலை உயரவில்லை. அதை விட அதிகமாக நூல் விலையை நூற்பாலைகள் உயர்த்தியுள்ளன. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பருத்தி பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் பதுக்கல் பஞ்சு தானாக வெளியே வரும். 40 லட்சம் பேல்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வருகிறது. அவை கிடைக்கும்போது நூல் விலை குறையும். அதுவரை பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல் நூல் இறக்குமதிக்கான வரியை முற்றிலும் நீக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து விரைவில் ஜவுளித்துறையினருடன் சேர்ந்து மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து முறையிட உள்ளோம்.
பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம்:-
நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக எப்படி தொழில் செய்வது என்று தெரியாமல் இடியாப்ப சிக்கலில் தவித்து வருகிறோம். ஆர்டர் எடுக்கும்போது இருக்கும் நூல் விலை, அந்த ஆடைகளை தயாரிக்க நூலை வாங்குவதற்குள் அதிகரித்து விடுகிறது. எப்படி விலை பேசி ஆர்டர்களை பெற்று எப்படி ஆடைகளை தயாரித்து அனுப்புவது என்பது புரியாத புதிர்போல் ஆகிவிட்டது. நூல் விலையில் நிரந்தர தன்மை இல்லாவிட்டால் பனியன் தொழிலை செய்ய முடியாது. அதுபோன்ற நிலை தான் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. புதிதாக ஆர்டர்களை எடுப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் உற்பத்தி இழப்பு ஒருபுறம் ஏற்பட தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாகவே நூல் விலை உயர்வால் தொழில் மந்தநிலையிலேயே உள்ளது. பஞ்சுக்கான இறக்குமதி வரி நீக்கம் என்பதால் நூல் விலை குறையாது. ரஷியா-உக்ரைன் போர், மூலப்பொருட்களின் விலையேற்றம், ஜாப்ஒர்க் நிறுவனங்களின் கூலி உயர்வு போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் அடுத்தகட்டத்துக்கு செல்வது கேள்விக்குறியாக அமைந்து விட்டது. நூல் விலை குறைய சீரிய கவனம் செலுத்தி பருத்தி பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு உடனடியாக மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். உள்நாட்டில் நூல் விலை சீரான நிலையை எட்டும் வரை இந்த நடவடிக்கையை தொடர வேண்டும். நூல் ஏற்றுமதியால் நமது போட்டி நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிலை நமக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பையர்கள் இந்தியாவை விட்டு போட்டி நாடுகளுக்கு ஆர்டர் கொடுக்க சென்றுவிட்டனர். இதுதொடர்பாக மத்திய ஜவுளித்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங்குக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்ட முடிவு
டீமா சங்க தலைவர் முத்துரத்தினம்:-
நூல் விலை உயர்வு என்பது எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. நூல் விலை கடந்த 1½ ஆண்டுகளாக உயர்ந்து வந்தநிலையில் மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தோம். உரிய நேரத்தில் நடவடிக்கை இல்லாததன் விளைவு தற்போது இக்கட்டான சூழ்நிலையில் ஜவுளித்தொழில் தவித்து வருகிறது. நூற்பாலைகளுடன் ஜவுளித்துறையினரும் சேர்ந்து மத்திய அரசிடம் முறையிட்டதால் பருத்தி பஞ்சுக்கான இறக்குமதி வரி நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் நூற்பாலைகள் தன்னிச்சையாக நூல் விலை உயர்வை அறிவிக்கிறார்கள். இதனால் பின்னலாடை தொழிலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு பருத்தி கழகம்
நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி:-
பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே பஞ்சு மற்றும் நூல் விலை குறையும். பஞ்சு பதுக்கல் அதிகரித்து விட்டது. நூற்பாலைகள் நூல் விலையை அபரிமிதமாக உயர்த்தி விட்டனர். பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்கி விட்டதால் எந்த பயனும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து பஞ்சை வாங்கி அவற்றை கண்டெய்னரில் ஏற்றி கப்பலில் இந்தியாவுக்கு கொண்டு வருவது என்பது ஒரு சில பெரிய நிறுவனங்களால் மட்டுமே முடியும். நூற்பாலைகளால் கூட அவற்றை செய்ய முடியாது.
40 லட்சம் பேல்கள் பஞ்சு இந்தியாவில் இருப்பு இருந்தும் நூற்பாலைகளுக்கு கிடைப்பதில்லை. பதுக்கலை தடுக்க பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது அவசியம். மத்திய அரசு இதை செய்ய வேண்டும். பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். தமிழ்நாடு பருத்தி கழகத்தை மாநில அரசு அமைத்து, குஜராத், மராட்டியம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து பஞ்சை கொள்முதல் செய்து தமிழக நூற்பாலைகளுக்கு வழங்கினால் தேவையில்லாத விலையேற்றத்தை தவிர்க்க முடியும். செயற்கை இழை ஆடைகளை கொண்டு தயாரிக்கப்படும் டெக்னிக்கல் ஜவுளித்துறையை நாம் தேர்வு செய்தால் தான் இனி சுமூகமாக தொழிலை செய்யும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ரோபோ ரவி:-
நூல் விலை தொடர் உயர்வால் திருப்பூர் பனியன் தொழில்துறையினர் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு முறை நூல் விலை உயரும் போதும் அதன் பாதிப்பு பல மாதங்களுக்கு உள்ளது. ஆர்டர்களை எடுத்து செய்வதற்கே தொழில்துறையினர் தயங்க வேண்டிய நிலை உள்ளது. பெரிய அளவில் ஆர்டர்கள் இல்லாததால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க நூல் விலை உயர்வை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் நூல் விலை உயர்வு பிரச்சினைக்கு அரசு ஒரு நிரந்தர தீர்வு கண்டு, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும்.
கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி:-
இந்திய அளவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பை வழங்குவது ஜவுளித்துறையாகும். திருப்பூரில் மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மிகப்பெரிய தொழிலாக பின்னலாடை ஏற்றுமதி உள்ளது. தொடர் நூல் விலை உயர்வால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி அவர்களை சார்ந்துள்ள எலாஸ்டிக், டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரி உள்ளிட்ட பல்வேறு ஜாப்ஒர்க் நிறுவனங்களும், துணை மூலப்பொருட்கள் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் பின்னலாடை தொழில் மீண்டும் புத்துயிர் பெறவும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலையை தடுக்கவும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் பஞ்சை சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த்:-
ஏற்கனவே உள்ள நூல் விலை உயர்வை சமாளிக்க முடியாத நிலையில் தற்போது மேலும் நூல் விலை உயர்ந்திருப்பது வெந்த புண்ணில் ேவலை பாய்ச்சுவது போன்று உள்ளது. பல லட்சக்கணக்கான வட மாநிலத்தவர்களுக்கு ேவலை வாய்ப்பு தரும் இடமாக இருந்து வரும் திருப்பூரின் தற்போதைய நிலையை பார்க்கும் போது தொழிலை பாதுகாப்பதென்பது கேள்விக்குறியான விஷயமாக உள்ளது. பனியன் தொழிலில் பல நாடுகளுடன் நீண்ட காலமாக போட்டி போட்டு திருப்பூரை சர்வதேச சந்தையாக மாற்றியுள்ளோம். இதை தக்க வைப்பதற்கு பலரும் போராடி வரும் நிலையில் இப்படியே விலையேற்றம் தொடர்ந்தால் நாம் இருக்கின்ற வர்த்தகர்களையும் இழக்க வேண்டியதிருக்கும். இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுேம தீர்வு பிறக்கும். எனவே, பஞ்சு பதுக்கல், ஏற்றுமதியை தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிப் தலைவர் அகில் மணி:-
பனியன் தொழிலில் அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படியொரு விலையேற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை. இது தலையில் இடி விழுந்தது போன்று உள்ளது. அதிகப்படியான விலையேற்றம் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே இறக்குமதி வரியை குறைப்பதில் காலதாமதம் செய்த நிலையில், தற்போது மத்திய அரசு கண்டும் காணாமல் இருப்பதால் தான் இந்த விலையேற்றம் ஏற்படுகிறது. பஞ்சு ஏற்றுமதியை தடை செய்தால் மட்டுமே தொழிலை காப்பாற்ற முடியும். ஆனால் இதை செய்யாமல் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என கூறும் அரசு ஒட்டுமொத்த பனியன் தொழிலை காக்க பஞ்சை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வர வேண்டும். மேலும், தற்போதைய நிலையை மாற்ற மத்திய அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.
நஷ்டம்
சைமா சங்க பொதுச்செயலாளர் பொன்னுசாமி:-
டிசம்பர் மாதத்துக்கு பிறகு நூல் விலை கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. உள்நாட்டு ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் கடந்த டிசம்பர் மாத நூல் விலை அடிப்படையிலேயே கொடுக்கிறார்கள். ஆனால் அதை வைத்து ஆடைகளை தயாரித்து கொடுத்தால் நஷ்டத்தை தான் சந்திக்க முடியும். ஆர்டர்கள் இருந்தும் எடுத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் பெருகி விட்டதால் தொழில் நன்றாக நடப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் ஜவுளித்தொழில் பாதிப்பை சந்தித்து வருகிறது. தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.