கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

Update: 2022-05-02 17:58 GMT
சாயல்குடி
கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த கிராமசபை கூட்டம், நியாய விலை கடை திறப்பு மற்றும் பனைத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சங்கர் லால் குமாவத் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், ஊராட்சி தலைவர்கள் கீழக்கிடாரம் மீனாள் தங்கையா, வாலிநோக்கம் பீர் முகம்மது, சாயல்குடி பேரூராட்சி துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், கடலாடி தாசில்தார் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கிடாரம் ஊராட்சி காவாகுளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம், வாலிநோக்கம் கிராமத்தில் நடைபெற்ற நியாயவிலைக்கடை திறப்பு விழா விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். மேலும் சாயல்குடியில் நடைபெற்ற பனைத்தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது கூறியதாவது:-
வாலிநோக்கம் கிராமத்தில் உள்ள 5500 ஏக்கரில் 2500 ஏக்கரில் மட்டுமே தற்போது உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அரசு உப்பு நிறுவனத்தில் பயன்பாட்டில் இல்லாத 3,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து இப்பகுதியினருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாலிநோக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 138 கிராமங்களுக்கு கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாயல்குடி அருகே உள்ள குதிரைமொழி கிராமத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது ராமநாதபுரம் மாவட்டம் குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாறும். 
நடவடிக்கை எடுப்பார்
கடலாடியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு கைத்தறி பின்னலாடை நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. சாயல்குடியில் போக்குவரத்து பணிமனை தொடங்க நடவடிக்கை எடுத்து கிராமங்கள்தோறும் பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டு பஸ் வசதி இல்லாத கிராமங்களாக இப்பகுதியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடலாடி ஒன்றியத்தை பிரித்து சாயல்குடி சிக்கல் என ஒன்றியங்கள் பிரிக்கப்படும். மீன்பிடித் தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் போன்று பனைத்தொழில் இல்லாத காலங்களில் பனைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். சாலை மேம்பாடு, குடிநீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி முதுகுளத்தூர் முன்மாதிரி தொகுதியாக மாறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்