காட்டுப்பகுதிக்குள் பதுக்கிய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராமநாதபுரம் அருகே காட்டுப்பகுதிக்குள் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே காட்டுப்பகுதிக்குள் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்த திட்டமிட்டுள்ளதாக ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அசோக், தலைமை காவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆர்.எஸ்.மங்கலம் அருகே அழுந்திக்கோட்டை கண்மாய் பகுதியில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து நள்ளிரவில் அங்கு சென்று சோதனையிட்டபோது கண்மாய் நடுவில் காட்டு கருவேல மரங்களுக்கு இடையில் இடத்தினை சுத்தம் செய்து மூடை மூடையாக ரேஷன் அரிசி மற்றும் கோதுமைகளை அடுக்கி வைத்து தார்ப்பாய் கொண்டு மூடி வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதனை கணக்கிட்டு பார்த்தபோது 3 டன் ரேஷன் அரிசியும், 1600 கிலோ கோதுமையும் இருந்தது தெரிந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். போலீசார் வருவதை அறிந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பரபரப்பு
இந்த ரேஷன் அரிசியை ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை சுற்றுவட்டார பகுதிகளில் சேகரித்து மினி சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து கண்மாய் நடுவில் காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்துள்ளனர். இந்த ரேஷன் அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் ஏ.புனவாசல் பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பியை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே கண்மாய் காட்டுப்பகுதிக்குள் 3 டன் ரேஷன் அரிசி மற்றும் 1600 கிலோ கோதுமையை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணன், தம்பி பிடிபட்டால்தான் இந்த ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கினார்களா அல்லது ரேஷன்கடையில் இருந்து வாங்கினார்களா என்பது தெரியவரும்.