ரேஷன்கடை அமைக்கக்கோரி கிராமமக்கள் மனு

கமுதி அருகே சாமிபட்டியில் ரேஷன்கடை அமைக்கக்கோரி கிராமமக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-05-02 17:58 GMT
ராமநாதபுரம்
கமுதி அருகே சாமிபட்டியில் ரேஷன்கடை அமைக்கக்கோரி கிராமமக்கள் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
கமுதி தாலுகா சாமிபட்டி கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கமுதி அருகே சாமிபட்டி கிராமத்தில் சுமார் 250 குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் 50 குடும்ப அட்டைதாரர்கள் எங்கள் கிராமத்திலிருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மேட்டுப்பட்டி ரேஷன் கடையில் தான் பொருள்கள் வாங்கி வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் வயதானவர்கள் கஷ்டப்பட்டு வருகிறோம். ஆகவே ரேஷன் பொருட்கள் வாங்க வசதியாக சாமிபட்டி கிராமத்திலேயே ரேஷன் கடை அமைத்து கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மண்டபம் அகதிகள்
மேலும் மண்டபம் அகதிகள் மூகாமில் வசித்து வரும் அகதிகள் ரஞ்சனி, சசிகலா தேவி, துஷாந்தன் உள்ளிட்ட சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 
மண்டபம் அகதிகள் முகாமில் நூற்றுக்கணக்கான தனித்தனி வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இலங்கையிலிருந்து வரும் எங்களைபோன்ற அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வரும் எங்களை போன்ற அகதிகளுக்கு தனி ரேஷன் கார்டுகள், சலுகை விலையில் ரேஷன் பொருட்கள், இலவச தங்குமிடம் வழங்கப்படுகிறது. நாங்கள் பல ஆண்டுகளாக மண்டபம் அகதிகள் முகாமில் ஒரே ரேஷன் கார்டு மற்றும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். அனைவரும் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால் சிறிய வீட்டில் வசிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, எங்களுக்கு தனி ரேஷன் கார்டு மற்றும் தனிவீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்