நூல் விலை கிலோவுக்கு ரூ40 உயர்வு

நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளதால் பின்னலாடை துறையினர் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இதனால் ஜவுளித்தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-05-02 17:56 GMT
திருப்பூர்
நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளதால் பின்னலாடை துறையினர் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இதனால் ஜவுளித்தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர் விலையேற்றம்
பின்னலாடை துறையில் முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. பருத்தி பஞ்சு விலையேற்றம் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக நூல் விலை உயர்ந்து வருகிறது. மாதந்தோறும் நூல் விலை அதிகரிப்பதால் புதிய ஆர்டர்களை எடுப்பதில் பின்னலாடை துறையினர் தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் பையர்களும் திணறி வருகிறார்கள். நூற்பாலை சங்கத்தினர் மாதந்தோறும் 1-ந் தேதி நூல் விலையை அறிவிப்பது வழக்கம்.
இந்த நிலையில் அனைத்து நூல் விலையும் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் கிலோ ரூ.440-க்கு விற்பனை செய்யப்பட்ட நூல் நேற்று ரூ.480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது போல் ரகம் வாரியாக நூல்களின் விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இதனால் பின்னலாடை துறையினர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வரி நீக்கத்தால் பயன் இல்லை
பஞ்சு விலையேற்றத்தை முக்கிய காரணமாக கூறி நூல் விலையை நூற்பாலைகள் உயர்த்தி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் பருத்தி பஞ்சுக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பருத்தி சீசன் தொடங்க இன்னும் 6 மாதங்கள் ஆகும். அதுவரை இருப்பில் உள்ள பஞ்சை வைத்தோ அல்லது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சை வைத்தோ நூற்பாலைகள் நூல் தயாரிக்க வேண்டும். பஞ்சை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் மட்டுமே நூற்பாலைகள் இயங்கும் நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜவுளித்துறையினர் கடந்த மாதம் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தனர். நூல் விலை அதிகரிப்பதாலும், பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் வெளிநாடுகளில் இருந்து பருத்தி பஞ்சை இறக்குமதி செய்யும்போது இறக்குமதிக்கான 11 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைத்தனர். மத்திய அரசும் இறக்குமதி வரியை வருகிற செப்டம்பர் மாதம் முடிய முழுவதுமாக நீக்கம் செய்து அறிவித்தது. இதற்கு ஜவுளித்துறையினர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இறக்குமதி வரி நீக்கத்தால் பெரிய அளவில் நூல் விலை குறையாது என்றும், எதிர்பார்த்த பலன் இருக்காது என்றும் பின்னலாடை துறையினர் தெரிவித்து வந்தனர்.
விழிபிதுங்கி திணறல்
இந்த நிலையில் நூல் விலை நேற்று ஒரே அடியாக கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளதை பின்னலாடை துறையினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நூற்பாலைகளின் அறிவிப்பை தங்களால் ஏற்க முடியாது. எனவே இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதிதாக ஆர்டர்கள் எடுப்பதை முற்றிலும் தவிர்க்கும் சூழலில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னலாடை தொழிலை நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. நூல் விலையேற்றம் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பின்னலாடைத்துறை ஏற்றம் பெற நினைத்தாலும் நூல் விலை உயர்வு என்பது பின்னலாடை உற்பத்திக்கு பெரும் தடைக்கல்லாகவே அமைந்து வருகிறது. உற்பத்தி நிறுத்தம் மற்றும் தொழிலாளர்கள் வேலையிழப்பு ஏற்படும் அபாயத்தை பின்னலாடைத்துறை நெருங்கி வருகிறது. இதனால் பனியன் தொழில்துறையினர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி திணறி வருகிறார்கள்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை காலம் கடத்தாமல் மேற்கொண்டால் மட்டுமே பின்னலாடை துறை மேம்படும் என்று தொழில்துறையினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்