அகோலாவில் அணையில் மூழ்கி தாய், 2 மகள்கள் பலி- மாட்டை தேடி சென்ற போது பரிதாபம்

அகோலா அணையில் மூழ்கி தாய், 2 மகள்கள் பலியாகினர். இவர்கள் மாட்டை தேடி சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-05-02 17:43 GMT
கோப்பு படம்
அகோலா, 
அகோலா அணையில் மூழ்கி தாய், 2 மகள்கள் பலியாகினர். இவர்கள் மாட்டை தேடி சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.
 மாட்டை தேடி சென்ற தாய், மகள்கள்
அகோலா மாவட்டம் பர்சித்தாகாலி தாலுகா தாகாட்பர்வா கிராமத்தை சேர்ந்தவர் சரிதா (வயது40). இவர் கணவர் மற்றும் மகள்கள் அஞ்சலி (16), வைசாலி (13) ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டில் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று காணாமல் போய் விட்டது. இதனால் சரிதா தனது 2 மகள்களுடன் எருமை மாட்டை தேட வீட்டை விட்டு வெளியே சென்றார். இரவு வெகு நேரமாகியும் 3 பேரும் வீடு திரும்பவில்லை. 
இது பற்றி அறிந்த கணவர் கிராமத்தினர் உதவியுடன் பல இடங்களில் தேடி அலைந்தனர். எங்கும் கிடைக்காததால் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
3 பேர் உடல்கள் மீட்பு
இந்த புகாரின் படி போலீசார் காணாமல் போன 3 பேரை தேடி வந்தனர். இதற்கிடையில் காணாமல் போன 3 பேர் அகோலா அணைக்கட்டு பகுதியில் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களின் சாவிற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், 2 மகள்கள் பலியான சம்பவம் அந்த கிராம வாசிகளிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்