பொள்ளாச்சியில் ரூ.43 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம்

பொள்ளாச்சி நகர மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க ரூ43 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-05-02 17:35 GMT
பொள்ளாச்சி, 

குடிநீர் வினியோகம்

பொள்ளாச்சி நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவை ஆழியாற்றின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக அம்பராம்பாளையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 

ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அங்கு சுத்திகரிக்கப்பட்டு பிரதான குழாய்கள் மூலம் மார்க்கெட் ரோட்டில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கிருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு சென்று குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது நகரில் ஒரு நபருக்கு தினமும் 103 லிட்டர் குடிநீர் தேவை என்ற அடிப்படையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 இதற்கிடையே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டால் கூடுதலாக குடிநீர் வழங்க முடியும். இதற்காக புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.43 கோடி நிதி

அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து தினமும் 10.5 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி நகராட்சிக்கு 9.4 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்படுகிறது. 

நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 17,405 குடிநீர் இணைப்புகள் உள்ளன. தற்போது ஒரு நபருக்கு 103 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் 135 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.

இதற்காக பொள்ளாச்சியில் ரூ.43 கோடியில் புதிதாக குடிநீர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக மோட்டார் பொருத்துதல், தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.

 அரசிடம் இருந்து நிதி வந்ததும், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்