கோவையில் நேற்று முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.

கோவையில் நேற்று முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.

Update: 2022-05-02 17:27 GMT
கோவை

கோவையில் நேற்று முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இதையொட்டி நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

ரம்ஜான்

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான், பக்ரீத் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், ஆண்டுதோறும் வரும் மாதங்களை காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாக கருதப்படுகிறது. 

இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் முஸ்லிம்கள் கருதுகின்றனர்.நன்மை, தீமைகளை பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.

சிறப்பு தொழுகை

இதன்படி ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை கோவையில் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் நேற்று கொண்டாடினர். இதையொட்டி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹால் திடலில் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பை சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக சிறப்பு தொழுகை நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு சிறப்பு தொழுகையில் ஜாக் கமிட்டியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

சுன்னத் ஜமாத் சார்பில் இன்று கொண்டாட்டம்

புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.இன்று (செவ்வாய்கிழமை) பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை மற்றும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்